×

சாந்தினி சவுக் மறுஉருவாக்கப்பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்: மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்கவும் உத்தரவு

புதுடெல்லி: மறுஉருவாக்கப்பணிகள் நடைபெற்று வரும் சாந்தினி சவுக் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உயர்  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது அந்த பகுதியை அழகுப்படுத்துவதற்கான மறுஉருவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக சிசிடிவி கேமராக்களை பொறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால், இதுவரை அந்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அதோடு, மறுஉருவாக்கப்பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து புகாரை உயர்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கு மற்றும் ரேகா பல்லி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஷாஜனாபாத் மறு மேம்பாட்டு கார்ப்பரேசன்(எஸ்ஆர்டிசி)  தலைவர் சார்பில் ஆஜரான அவரது வக்கீல் நவ்ஷாத் அகமது கான், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரின் தலைமையில்  நடைபெற்ற ஏப்ரல் 9 கூட்டத்தின் முடிவுகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

அதில், சாந்தினி சவுக் திட்டப்பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த பகுதியில் அரங்கேறும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பாடாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அநத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட பின் நீதிபதிகள், இந்த பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படால் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், இதுவரை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நல்ல பணிகள் வீணாகிவிடக் கூடாது. சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க கோரும் உத்தரவுக்கு உடன்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


Tags : Chandni Chowk ,iCourt , Chandni Chowk
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...